வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு இன்று காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனை தீயணைப்பு வீரர் எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர் வீட்டிற்குள் பாம்பு வந்து விட்டதாகவும், உடனடியாக வந்து பிடிக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு வீரர், அவரை பற்றிய விவரங்களை கேட்டுள்ளார். இதன்பின் அந்த நபரிடம், பாம்பு வீட்டின் எப்பகுதியில் உள்ளது என உங்களது மொபைலில் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் வீட்டின் மாடியில் உண்மையில் பாம்பு உள்ளதாகவும், நான் சொல்வதில் உங்களுக்கு  நம்பிக்கை இல்லையா?  என கோபமாக பேசியுள்ளார். மேலும் அவர் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவதாகவும், பாம்பை பிடிக்க வராவிட்டால் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பேன் என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

அதற்கு அவர் வீடுகளில் பாம்பு வந்து விட்டதாக சிலர் தவறான தகவல்கள் தருகின்றனர்.  எனவே பாம்பு இருப்பதை உறுதிப்படுத்தவே புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்லியதாக  தீயணைப்பு வீரர் கூறினார். அதையடுத்து அந்த நபரின் வீட்டிற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.   வீட்டின் மொட்டைமாடியில் உள்ள பூந்தொட்டியில் பாம்பு பதுங்கி இருப்பதாக கூறினார். அதன்படி  அவர்கள் அங்கு சென்று, பூந்தொட்டியின் பின்னால் மறைந்திருந்த பாம்பை இரும்பு கம்பியால் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அதன் உள்ளே இருந்து ஓணான் ஒன்று வெளியே வந்துள்ளது. அதன் பின் அந்த இடத்தை சுற்றி தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் பாம்பு கிடைக்கவில்லை. பின் அங்கிருந்த ஓணானை விரட்டினர். இந்நிலையில் ஓணானை சரியாக பார்க்காமல் பாம்பு என நினைத்து போன் செய்து, அலைக்கழித்து விட்டதாக, தீயணைப்பு வீரர்கள் கூறினர். அதற்கு ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தால் இதனை தவிர்த்திருக்கலாம் என அங்கலாய்த்தப்படி அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.