கணவனை இழந்து 2 சிறிய குழந்தைகளுடன் உள்ள ஆதரவற்ற விதவை ஆகிய தனக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும் என கும்பகோணம் விட்டலூர் கிராமத்தில் வசித்து வரும் ஜெனிபர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தார். அந்த கடிதத்தில் ஜெனிபர் கூறியதாவது “நான் தஞ்சை கும்பகோணம் தாலுகா விட்டலூர் கிராமத்தில் வசிக்கிறேன்.

என் கணவர் அன்பு(34) வெளிநாட்டில் வேலைக்கு சென்றபோது அங்கு உயிரிழந்தார். என் கணவர் இறந்து 4 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. எனக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். அதில் 1 குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை இருக்கிறது. அதோடு என் மகனின் சிகிச்சைக்கு கூட மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். நான் எந்தவொரு வாழ்வாதாரமும் இன்றி வசித்து வருகிறேன்.

தமிழகத்தில் வசித்து வரும் எனக்கு ஆதரவற்ற விதவை என்ற அடிப்படையில் அரசு வேலை வழங்கிட வேண்டி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் , இதுவரை எனக்கு எவ்வித பணியும் கிடைக்கவில்லை. எனவே முதல்வர் கருணை அடிப்படையில் தன் பகுதியில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியை வழங்கி தனக்கும், தன் குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்கும் உதவி செய்யவேண்டும். இல்லையேல் தன்னையும் தன் குழந்தைகளையும் கருணைக் கொலை செய்துவிடும்படி கண்ணீருடன் கூறினார்.