நடப்பு வருடத்திற்கான வருமான வரிக் கணக்கை(ITR) தாக்கல் செய்வதற்குரிய கடைசி நாள் ஜூலை 31ம் தேதியாகும். புது வருமான வரிச் சட்டங்களின் கீழ் ஒரு சிறப்பு அம்சமானது தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. நாட்டில் நேரடி வரிச் சட்டங்களை நிர்வகிப்பதற்கு மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு வருமான வரித்துறை, வரி செலுத்துபவருக்கு வருடாந்திர தகவலறிக்கை (AIS) எனும் புதிய அறிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யக்கூடிய செயல்முறையை ஈஸியாக்கும். AIS என்பது நீங்கள் மேற்கொண்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையாகும். வருமான வரித்துறையின் மேலும் நினைவூட்டல்களை தடுப்பதற்கு வரி செலுத்துவோர், புது வருடாந்திர தகவல் அறிக்கையை பயன்படுத்தி அதை சமர்ப்பிக்கும் முன் வருமான வரிக்கணக்கை சரிபார்க்கலாம். AIS என்பது ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டிற்குரிய உங்களின் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் பட்டியலிடுகிறது.

அத்துடன் 1961-ன் வருமான வரி சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட தகவலை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை ஆகும். வெளிநாட்டு பணம் அனுப்புதல், வட்டி, ஈவுத் தொகை, பங்கு வர்த்தகம், பரஸ்பர நிதி செயல்பாடு, முதலியன AIS-ல் சேர்க்கப்பட்டுள்ளது. ITRஐ சமர்ப்பிக்க உங்களுக்கு AIS தேவைப்படும். AIS பெறும் வரையிலும் ITRஐ பதிவு செய்யக்கூடாது. ஏனென்றால் AIS இன்றி ITR சமர்ப்பிக்கப்பட்டால் புள்ளி விபரங்கள் வேறுபட்டு இருக்கலாம். மே முதல் வாரத்தில் புதுப்பிக்கப்பட்ட ஏஐஎஸ் வரிசெலுத்துவோருக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.