2022-2023 நிதி ஆண்டு முடிவடைய இன்னும் சில காலங்களே இருப்பதால் FY23-க்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது கூடுதல் விலக்குகளை பெறுவதற்கான பயனுள்ள வழிகளை தெரிந்துக்கொள்வோம். வீட்டுவாடகை அலவன்ஸ் (ஹெச்ஆர்ஏ) என்பது ஊழியர்களுக்குரிய பொதுவான சம்பளக் கூறு ஆகும். இதற்கு முற்றிலும் வரிவிதிக்கப்படாது. கடந்த 1961-ன் வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 10 (13A)ன் கீழ் ஹெச்ஆர்ஏ-ன் ஒரு பகுதி விலக்கு அளிக்கப்படுகிறது. மொத்த வரி விதிக்கக்கூடிய வருமானத்தை கணக்கிடுவதற்கு முன்பு ஹெச்ஆர்ஏ விலக்கு தொகை மொத்த வருமானத்திலிருந்து கழிக்கப்படும்.
ஒரு ஊழியர் தன் சொந்த வீட்டில் வசித்தாலோ (அ) வாடகை ஏதும் செலுத்தாமல் இருந்தாலோ அவர்களுக்கு வரி உண்டு. அதுவே மெட்ரோ நகரங்களில் வசிக்கும் சம்பளம் பெறும் ஊழியர் ஹெச்ஆர்ஏ-ல் இருந்து 50% விலக்கு பெற தகுதியுடையவர் ஆவார். சம்பளம் பெறும் ஊழியர்களுடைய குழந்தைகளின் கல்விக்கான அலவன்ஸ்கள் மற்றும் கல்விக் கட்டணங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. கல்விக்கான அலவன்ஸ்களின் கீழ் ஒரு குழந்தைக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய்.100 வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 80-சி பிரிவின் கீழ் குழந்தைகளின் கல்விக்கட்டணத்துக்கு ரூபாய்.1.5 லட்சம் வரை விலக்களிக்கப்படும். செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், புத்தகங்கள் ஆகியவற்றை வாங்கும் போது ஏற்படும் செலவினங்களுக்காக புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள் அலவன்ஸ்கள் கீழ் வரி விலக்கு உண்டு. குறிப்பிடப்பட்ட வரம்புக்குள் ஊழியர் ஒருவர் உண்மையான கட்டணத்திற்கு வரிவிலக்கு கோரலாம்.