உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உதவி காவல் ஆணையாளராக பணிபுரிந்து வரும் சுகன்யா சர்மா, நகரின் இரவு நேர பெண்களின் பாதுகாப்பு நிலையை சோதிக்க யோசித்தார். சுற்றுலாபயணி  என கூறி, மப்டி உடையில் போலீஸ் அதிகாரியாக காட்டிக்கொள்ளாமல், கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் அருகில் நின்று, போலீசாரை அழைத்து உதவி கேட்டார்.

போலீசார் உடனடியாக பதிலளித்து, பாதுகாப்பான இடத்தில் நிற்கும்படி கூறினர், பின்னர் பெண் ரோந்து குழுவினர் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதன் மூலம் அவசரகால உதவி முறைகள் சரியாக செயல்படுகிறதா என சோதனை செய்து, போலீசாரின் செயல்பாட்டை பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பு நிலையை மேலும் அறிய, ஒரு ஆட்டோவை அழைத்து பயணத்தைத் தொடங்கினார். ஆட்டோ ஓட்டுநரிடம் பாதுகாப்பு குறித்து கேட்டபோது, அவர் சிறந்த பதில் அளித்தார். நகரில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதை கவனத்தில் கொண்டு, அவர் தனது கடமையை நியாயமாக செய்தார். இந்த சோதனையிலும் ஆட்டோ ஓட்டுநர் சிறப்பாக தேர்ச்சி பெற்றார்.

சுகன்யா சர்மாவின் இந்த புதுமையான சோதனை செயல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. நெருக்கடியில் உள்ள பொதுமக்களின் அனுபவங்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான இந்த முயற்சி, மற்ற நகரங்களில் உள்ள காவல் துறையினராலும் பின்பற்றப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.