உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை அவர்கள் பயணம் செய்த டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். பாட்டியாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாட்டியாலி-தரியவ்கஞ்ச் சாலையில் டிராக்டர்-டிராலியில் இருந்தவர்கள் கங்கை ஆற்றில் குளிக்கச் சென்றபோது நடந்த இந்த விபத்தில் 15-20 பேர் காயமடைந்துள்ளனர்.

அலிகார் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஷலப் மாத்தூர் கூறுகையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

“டிரைவர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிராக்டர் டிராலி கவிழ்ந்து ஏழு முதல் எட்டு அடி ஆழமுள்ள குளத்தில் விழுந்ததில் 24 பேர் இறந்தனர். சுமார் 15-20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என்று மாத்தூர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் 8 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். எட்டா மாவட்டத்தில் உள்ள ஜெய்தாரா என்ற இடத்தில் இருந்து டிராக்டர் டிராலி வந்து கொண்டிருந்தது. நான் பிரதேச ஆணையருடன் (அலிகார்) இடத்திற்குச் செல்கிறேன். பிரேத பரிசோதனைக்கு பிறகு இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

அதில் கூறியபடி விபத்தில் உயிரிழந்தவர்களில் 22 பேர் குட்டி (75), சகுந்தலா (70), திக்விஜய்யின் மனைவி மீரா (65), ராஜ்பால் மனைவி மீரா (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.காயத்ரி (52), புஷ்பா (45), ஷியாம்லதா (40), சிவம் (30), ஷிவானி (25), அஞ்சலி (24), ஜோதி (24), உஷ்மா (24), சப்னா (22), தீக்ஷா (19), சுனைனா (10), குல்தீப் (7), தேவன்ஷி (6), சந்தியா (5), கார்த்திக் (4), லட்டு (3), சித்து (ஒன்றரை வயது), பாயல் (இரண்டு மாதங்கள்). மேலும் இருவரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் அலிகாரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். உயிரிழந்தவர்களில் 13 பெண்கள், எட்டு குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் அடங்குகின்றனர்.

இதனிடையே இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடி மற்றும் போதுமான சிகிச்சையை உறுதி செய்யுமாறு கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தல்லா ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து காஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கப்படும்.மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கப்படும்” என தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி, “நெஞ்சை பதற வைக்கிறது! உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் டிராலி குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். அத்துடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது” என தெரிவித்திருந்தார்.