U19 பெண்கள் T20 WC இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்ற நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை போட்செஃப்ஸ்ட்ரூமில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது. பெண்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.இதில் சௌமியா திவாரி (24 நாட் அவுட்), கோங்காடி த்ரிஷா (24) அதிக ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோன்ஹவுஸ், ஸ்க்ரிவன்ஸ், பேக்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

முன்னதாக இந்திய பந்துவீச்சாளர்களின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் ரியான் மெக்டொனால்ட் 19 ரன்கள் எடுத்து தனது அணியின் அதிகபட்ச ஸ்கோரராக இருந்தார். இந்திய தரப்பில் டிடாஸ் சந்து, அர்ச்சனா தேவி, பார்ஷ்வி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷெபாலி வர்மா, மன்னத் காஷ்யப் மற்றும் சோனம் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

சர்வதேச அளவில், இந்திய பெண்கள் சீனியர் அணியுடன் இரண்டு உலகக் கோப்பைகள் மற்றும் ஒரு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற ஷபாலி வர்மா, தனது தலைமையின் கீழ் கோப்பையை வென்று பெரிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரார்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அதேபோல பிரதமர் மோடி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறப்பாக விளையாடி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற  இந்திய அணிக்கு வாழ்த்துகள். அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர் மற்றும் அவர்களின் வெற்றி வரவிருக்கும் பல கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும். குழுவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய பெண்கள் 19 வயதுக்குட்பட்டோர் (விளையாட்டு லெவன்):

ஷபாலி வர்மா (கேப்டன்), ஸ்வேதா செஹ்ராவத், சௌமியா திவாரி, கோங்காடி த்ரிஷா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷிதா பாசு, டைட்டாஸ் சந்து, மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷ்வி சோப்ரா, சோனம் யாதவ்.

இங்கிலாந்து பெண்கள் 19 வயதுக்குட்பட்டோர் (விளையாட்டு லெவன் ):

கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் (c), லிபர்ட்டி ஹீப், நியாம் ஃபியோனா ஹாலண்ட், செரீன் ஸ்மேல் (வாரம்), ரியான் மெக்டொனால்ட் கே, சாரிஸ் பொவேலி, அலெக்சா ஸ்டோன்ஹவுஸ், சோபியா ஸ்மால், ஜோசி க்ரோவ்ஸ், எல்லி ஆண்டர்சன், ஹன்னா பேக்கர்சன் .