நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் 1:1 எனதொடர் சமநிலை ஆனது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடந்த முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து அணி. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி லக்னோவில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.. அதன்படி நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் தலா 11 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்..

அதனைத்தொடர்ந்து வந்த சாப்மேன் 14, கிளென் பிலிப்ஸ் 5 மற்றும் டேரில் மிட்செல் 8 என மிடில் ஆர்டர் பேட்டர்கள் அனைவருமே இந்திய பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். மேலும் பிரேஸ்வெல் 14 மற்றும் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் அவுட் ஆகாமல் 19 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட் எடுத்தார். மேலும் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சஹால், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.. மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் நியூசிலாந்து அணி திணறியது.

இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் 11 ரன்னிலும், இஷான் கிஷன் 19 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த ராகுல் திரிபாதி 13 ரன்னில் ஏமாற்றினார். தொடர்ந்து  சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி பொறுமையாக ஆடியது. பின் வாஷிங்டன் சுந்தர் 18 ரன்கள் எடுத்த நிலையில், 15 வது ஓவரில் ரன் அவுட் ஆனார். அதன்பின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், சூர்யகுமார் யாதவும் சேர்ந்து பொறுமையாகதட்டி தட்டி ரன்கள் சேர்த்தனர்.

கடைசி 2 ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது. பெர்குசன் வீசிய 19வது ஓவரின் 5வது பந்தில் பாண்டியா ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரின் மொத்தம் 7 ரன்கள் கிடைத்தது. பின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை டிக்னர் வீசினார்.. முதல் பந்தை பாண்டியா எதிர்கொண்டு ஒரு ரன் அடிக்க ஸ்ட்ரைக்குக்கு வந்த சூர்யகுமார் யாதவால் 2வது பந்தை அடிக்க முடியவில்லை. 4 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 3வது பந்தில் சூர்யா ஒரு ரன் எடுத்தார்.

பின் 4வது பந்தில் பாண்டியா ஒரு ரன் எடுக்க, 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. சூர்யகுமார் யாதவ் ஆப் சைடில் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றி பெற்றதால் இரு அணிகளும் 1:1 என சம நிலையில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் 26 ரன்களுடனும், பாண்டியா 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்..