ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 முறை ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா வென்று கொடுத்ததால் இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஹர்திக் பாண்டியாவையும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் ரோகித் சர்மாவிடம் ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவது அவமானமா என ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, இது ஒரு சிறப்பான அனுபவமாகும். நான் இதற்கு முன்னதாகவும் நிறைய கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். எனவே இது ஒன்றும் எனக்கு புதிது கிடையாது. உங்களுடன் எது நடக்கிறதோ அதனுடன் சேர்ந்து நீங்களும் முன்னேறி செல்ல வேண்டும். ஒரு வீரராக என்ன செய்ய வேண்டுமோ அதையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். மேலும் அதைத்தான் கடந்த ஒன்றரை மாதங்களாக செய்வதற்கு நான் முயற்சித்து வருகிறேன். மேலும் ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த அவமானமும் கிடையாது என்று கூறியுள்ளார்.