தோனி கூறிய அறிவுரையை தான் இன்றும் கடைபிடிப்பதாக தோனியை பாராட்டியுள்ளார் ஆப்கான் இளம் வீரர் நஜிபுல்லா சத்ரான்..

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்காக அனைத்து வகையான உலகக் கோப்பைகளையும் வென்ற இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதன் மூலம் தோனி உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆனார். தனது விளையாட்டு வாழ்க்கையில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பல அறிவுரைகளை வழங்குவார். இந்திய வீரர்களாக இருந்தாலும் சரி, எதிரணி வீரர்களாக இருந்தாலும் சரி. அந்தளவிற்கு இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக 82 ஒருநாள் மற்றும் 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இளம் வீரர் நஜிபுல்லா சத்ரான், தோனி கூறிய அறிவுரையை தான் இன்றும் கடைபிடிப்பதாக தோனியை பாராட்டியுள்ளார். தற்போது மும்பை எமிரேட்ஸ் அணிக்காக சர்வதேச லீக் டி20 தொடரில் சத்ரான் விளையாடி  வருகிறார்.

இதுகுறித்து நஜிபுல்லா சத்ரான் அளித்த பேட்டியில், தோனியை எனது ரோல் மாடலாக கருதுகிறேன். அவர் போல் இன்னிங்ஸை யாராலும் முடிக்க முடியாது. அவரிடம் கற்றுக்கொண்டேன். 2015 உலகக் கோப்பை தொடரின் போது நான் அவரிடம் பேசியபோது, ​​அதிக அழுத்த சூழ்நிலைகளில் கூட அமைதியாக இருக்கவும், உங்களை நம்பவும் சொன்னார். நான் இன்னும் அந்த அறிவுரையை நம்பி பின்பற்றுகிறேன்.” என்று கூறினார்.