தமிழ்நாட்டின் கடன் நிலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் முரண்பட்ட கருத்துகள் வெளிப்பட்டுள்ளதால், திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில்,
‘‘அனைத்து மாநிலங்களிலும் அதிக கடன் வைத்துள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2010-ல் உத்தரப்பிரதேசத்தைவிட குறைவாக இருந்த தமிழ்நாட்டின் கடன், தற்போது இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்துள்ளது.

வட்டி சுமை அதிகமான மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. கடன் – உள்நாட்டு உற்பத்தி விகிதமும் கவலைக்குரியது’’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘‘தமிழ்நாட்டையும் உத்தரப்பிரதேசத்தையும் ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில் முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற கட்டமைப்பு, மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் தமிழ்நாடு நாட்டில் முன்னணியில் உள்ளது. கடனை வளர்ச்சியின் விளைவுகளுடன் இணைத்தே பார்க்க வேண்டும்’’ என்றார்.

மேலும், தமிழ்நாடு அதிக வரி வசூல் செய்தும் மத்திய நிதிப் பகிர்வில் குறைவாகவே பெறுகிறது என்றும், கடன் நீண்டகால உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்,
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை பாராட்டி கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட தலைவர்களும் திமுகவுக்கு ஆதரவாக பேசினர்.

இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு தரப்பு திமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பு 40–45 தொகுதிகள் மற்றும் அதிகாரப் பங்கீடு கோர வேண்டும் என்றும்,
இன்னொரு தரப்பு நடிகர் விஜய்யின் TVK கட்சியுடன் கூட்டணி சாத்தியங்களை ஆராய வேண்டும் என்றும் வாதிட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2004 முதல் பெரும்பாலான தேர்தல்களில் திமுக – காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டாலும், சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருவது அதிருப்திக்கு காரணமாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கருத்து வேறுபாடுகள், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.