பிரபல இந்தி சின்னத்திரை நடிகை சஞ்சிதா உகலே (23) கடந்த ஜூன் 14 அன்று தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘கும் கும் பாக்யா’, ‘வாக்லே கி துனியா’ போன்ற முன்னணித் தொடர்களிலும், ‘சாவா’ திரைப்படத்திலும் நடித்துள்ள இவர், ஏன் இந்த முடிவை எடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சஞ்சிதாவின் மரணத்திற்குத் தொலைக்காட்சித் துறையின் கடுமையான மன அழுத்தமே காரணம் எனச் சக நடிகை ஆஞ்சல் குரானா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு டிஆர்பி (TRP) ரேட்டிங் முக்கியம், தயாரிப்பாளர்களுக்குப் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும், நேயர்களுக்குப் பொழுதுபோக்கு வேண்டும்; ஆனால், இவற்றுக்கு நடுவே வாழும் கலைஞர்களின் மனநிலையைப் பற்றி இங்கே யாரும் கவலைப்படுவதில்லை” என்று சாடியுள்ளார்.

சின்னத்திரை உலகின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்திய ஆஞ்சல் குரானா, “சின்னச் சின்ன காரணங்களுக்காக நடிகர்களை மாற்றுவது (Replacement), சுயமரியாதையைக் காக்க நினைத்தால் தூக்கியடிப்பது அல்லது சம்பளத்தைக் குறைப்பது எனத் தயாரிப்பாளர்கள் கலைஞர்களை வதைக்கிறார்கள். வெறும் ஆயிரம் ரூபாய்க்காகக் கூட என்னைத் தூக்கியடித்துள்ளனர். தினமும் காலையில் புது நம்பிக்கையோடு எழுந்து, மாலையில் நிராகரிப்புகளுடனும் ஒப்பிடுகளுடனும் தூங்கச் செல்லும் கொடுமை இங்கு அரங்கேறுகிறது. திரைத்துறையினர் மிகவும் சுயநலவாதிகள். தங்களுக்குப் பலன் இல்லை என்றால் யாரையும் மதிக்க மாட்டார்கள். இதனால் நானும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி, தற்போது தில்லியில் உள்ள எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். நடிகர்கள் யாரும் தனியாக இருந்து மன அழுத்தத்தில் அழிய வேண்டாம்; வாய்ப்புகள் கிடைக்காதபோது சொந்த ஊருக்குத் திரும்பி, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுங்கள்” என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.