
2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள் குறித்து பார்ப்போம். அந்த வகையில் நாட்டையே உலுக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒன்று. மக்கள் அதிகமாக பயன்படுத்துவது ரயில் போக்குவரத்து தான். ஒரு மாநிலம் விட்டு மற்றொரு மாநிலம் செல்ல வேண்டும் என்றாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றாலும் ரயில் டிக்கெட் இருக்கிறதா என்று தான் முதலில் பார்ப்பார்கள். இந்த ஆண்டு பல ரயில் விபத்துக்கள் நடந்தது.
முக்கியமாக மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் மாவட்டம் பஹாநகா பஜார் பகுதியில் சென்ற போது தண்டவாளத்தில் நின்ற சரக்கு ரயில் மீது கோரமண்டல் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. மேலும் எதிர் திசையில் வந்த பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரயில் பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம் புரண்டது.
இந்த சம்பவத்தில் 295 பயணிகள் இறந்த நிலையில் 1100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல மணி நேரம் மீட்பு பணிகள் நடக்க பயணிகளின் குடும்பத்தினர் கண்ணீருடன் அலறிய காட்சிகள் நெஞ்சை உறைய வைத்தது. அடுத்ததாக அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பாலாசா எக்ஸ்பிரஸ் ரயில் பாசஞ்சர் ரயில் மீது மோதியது.
இந்த விபத்தில் 13 பயணிகள் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டார் காயமடைந்தனர். அடுத்ததாக உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக பயணமாக 60க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அவர்கள் பயணித்த ரயில் பெட்டி மதுரையில் கழற்றி தனியாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர். ரயில் பெட்டிக்கு உள்ளே கியாஸ் சிலிண்டர் வைத்து சமைத்ததே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.
மேற்கூறிய சம்பவங்கள் உயிர்பலி வாங்கிய ரயில் விபத்துகள் ஆகும். இது தவிர ஜூன் 11-ஆம் தேதி சென்னை புறநகர் மின்சார ரயிலில் மூன்று பெட்டிகள் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த ஜூன் 22-ஆம் தேதி சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற லோக் மணியா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து எரிந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அடுத்ததாக ஜூன் 9-ஆம் தேதி விஜயவாடா சென்னை சென்ட்ரல் ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்டது. இதிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி திருச்சியில் இருந்து ஸ்ரீ கங்கா நகர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் சிக்கியது. உடனடியாக தீப்பிடித்த ரயில் பெட்டி தனியாக கழற்றி விடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.