
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் அணி தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மீதம் உள்ள ஒரு இடத்தை பிடிப்பதற்கு மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இதில் ராஜஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் இருந்தாலும் அந்த அணிக்கு 14 போட்டிகள் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் இன்று மதியம் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் மும்பை அணி அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது கட்டாயம். ஏனெனில் அடுத்ததாக சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது.
இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஏற்கனவே மும்பையை விட அதிக ரன் ரேட்டில் இருப்பதால் 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி தகுதி பெற்று விடும். ஆர்சிபி அணி தோல்வியடைந்து மும்பை வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். ஒருவேளை சொந்த மண்ணில் மும்பை மற்றும் ஆர்சிபி அணி என இரண்டுமே தோல்வி அடைந்தால் ராஜஸ்தானும் இந்த இரு அணிகளுடன் தலா 7 வெற்றிகளில் இருக்கும். அந்த சமயத்தில் ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். மேலும் இதன் காரணமாக இன்று நடைபெறும் இரு போட்டிகளும் கண்டிப்பாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பதில் ஐயமில்லை.