பெற்றோர்கள் நமக்காகத் தங்களது ஆசைகளைத் தியாகம் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ஏழைத் தந்தை தனது மகனை மொபைல் கடைக்கு அழைத்துச் சென்று, அவனுக்குப் பிடித்த விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்கிக் கொடுக்கிறார்.
ஆனால், அந்தத் தந்தை தனது சட்டைப் பையிலிருந்து வெளியே எடுக்கும் போனோ, பட்டன்கள் உடைந்து தேய்ந்து போன ஒரு சாதாரண போன். தனது அடிப்படைத் தேவையைக் கூடப் பூர்த்தி செய்யாமல், மகனின் ஆடம்பர ஆசைக்காகத் தன்னிடம் இருந்த பணத்தைச் செலவழிக்கும் அந்தத் தந்தையின் முகம் பார்ப்பவர் நெஞ்சைக் கசக்கிப் பிழிவதாக உள்ளது.
Look at the face of his father and his mobile pic.twitter.com/FFouxeawyy
— Vishal (@VishalMalvi_) December 17, 2025
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த மகனை மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “தந்தையின் கஷ்டம் தெரியாமல் இப்படி ஒரு போன் கேட்க உனக்கு வெட்கமாக இல்லையா?” என்றும், “இன்றைய தலைமுறை பெற்றோரின் உழைப்பை மதிப்பதில்லை” என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், “மகன் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என நினைக்கும் தந்தைதான் கடவுள்” என அந்த முதியவருக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன. ஒரு தந்தை தனது ஏழ்மையிலும் மகனுக்காகச் செய்த இந்தத் தியாகம், சமூக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.
