2.5 டன் தக்காளியோடு வாகனத்தை கடத்திச் சென்ற தம்பதியினர் வேலூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் இல்லாததன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய  மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக வழிப்பறியில்  ஈடுபடும் தம்பதிகள் இரண்டு பேர் இரண்டரை டன் அளவிலான தக்காளியை லாரியுடன் கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.  பெங்களூர் மாநிலம் சித்ரதுர்க மாவட்டம் ஹிரியூர் பகுதியைச் சேர்ந்த மல்லேஷ் என்னும் விவசாயி தனது வாகனத்தில் 2.5 டன் தக்காளியுடன்  சென்று கொண்டிருந்தபோது வழிப்பறி  தம்பதியினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட,

தன்னிடம் கையில் பணம் ஏதும் இல்லை எனக் கூறியதும் அவரை 2.5 டன்  தக்காளி ஏற்றப்பட்டிருந்த வாகனத்தோடு கடத்திச் சென்றனர். பின் தங்களுக்கு ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தி விடுகிறேன் என்னை  விட்டு விடுங்கள் என அவர் கூறியதை தொடர்ந்து, தீவனப்பள்ளி அருகே வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார் மல்லேஷ்.  பின் காவல் நிலையத்தில் மல்லேஷ் புகார் அளிக்க,

வழக்கு பதிவு செய்த அதிகாரிகள்  வாகனத்தின் இயக்கத்தை தீவிரமாக கண்காணித்து, சிசிடிவி காட்சிகள் மூலம் தம்பதியினரை அடையாளம் கண்டு கொண்டனர்.  இதைத்தொடர்ந்து தக்காளியோடு சென்னை சென்ற தம்பதியினர் அதை  விற்றுவிட்டு, பின் பெங்களூரு அருகே நெடுஞ்சாலையில்  வாகனத்தை விட்டு விட்டு பதிவு எண் இல்லாத மற்றொரு வாகனத்தில் தப்பி சென்று விட்டனர் என   தெரியவந்துள்ளது.

அதைத்தொடர்ந்து தனிக்குழு அமைத்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வழிப்பறி தம்பதியினர் பிடிபட்டனர். தற்போது இருவர் மீதும்  கடத்தல் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.