
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிறது.
ஹெச் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர்தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.
இத்திரைப்படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பின் இரண்டாவதாக வெளியான காசேதான் கடவுளடா பாடலுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இதன்பின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா பாடல் வெளியானது. இதனைத்தொடர்ந்து துணிவு படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
வாரிசு திரைப்படமும், துணிவும் ஒரேநாளில் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பொங்கலுக்கு முன்னதாகவே ஜனவரி 11ஆம் தேதி துணிவு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு 4 நாட்களுக்கு முன்பே திரைக்கு வருகிறது துணிவு படம். துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில், துணிவு படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
#Thunivu to screen in Theatres across the world on January 11, 2023. #ThunivuPongal💥#NoGutsNoGlory #Ajithkumar #HVinoth@ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @kalaignartv_off @NetflixIndia @SureshChandraa #RomeoPictures @mynameisraahul @Gokulammovies @wcf2021
— Boney Kapoor (@BoneyKapoor) January 4, 2023