தேனி தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழக அரசு தொழில் நல்லுறவு என்ற பரிசு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அடிப்படையில் அமைதியும், நல்ல தொழில் உறவு முறைகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுடைய நல்ல உறவை பேணி காக்கும் வகையில் 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டிற்கான இந்த விருதினை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இவ்விருதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்பு குழுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து http://www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து, இந்த விருதிற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த விண்ணப்பத்தை தேனி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுவும் இம்மாதம் 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.