தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கராபாணி கோவை-ராமநாதபுரம் 80 அடி சாலையில் அமைந்துள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது அங்குள்ள ஒரு பயனாளி ரேஷன் கடைகளில் பழைய அரிசியை போடுவதாக கூறினார். அதற்கு அமைச்சர் இனி ரேஷன் கடைகளில் புது அரிசி மட்டும் தான் தருவார்கள் என்று அவருக்கு சமாதானம் தெரிவித்தார். அதன் பிறகு அமைச்சர் சக்கராபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19,000 குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கு 100 சதவீத பொருட்கள் தயாராக இருப்பதோடு, கரும்பும் 90% அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் கொள்கைப்[படி நியாயவிலைக் கடைகளில் சத்தான பொருட்கள் வழங்க வேண்டும் என்பதற்காக பருப்பு, உளுந்து, மைதா போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2 பொருட்களை கடந்த ஆட்சியை நிறுத்திவிட்ட நிலையில், தற்போது விவசாயிகள் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது குறித்த முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் விரைவில் பரிசீலனை செய்யப்படும்.

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் கைரேகை பதிந்து ரேஷன் அட்டைகளில் பொருள் வாங்க முடியாததன் காரணமாக கருவிழி பதிவு மூலம் ரேஷன் அட்டைகளில் பொருட்களை வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சேப்பாக்கம் மற்றும் பெரம்பலூர் ஆகிய 2 பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மற்ற பகுதிகளிலும் தொடங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு கூடிய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்நிலையில் ரேஷன் கடைகளில் அரிசியை படிப்படியாக குறைத்து விட்டு சிறு தானியங்கள் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளோம். இதன் முதற்கட்ட தூக்கமாக நீலகிரி மற்றும் தர்மபுரியில் 2 கிலோ ராகி வழங்குவதற்கு முடிவு செய்யப் பட்டுள்ளது என்று கூறினார். மேலும் அமைச்சரின் இந்த உத்தரவு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.