தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவில்பட்டி-கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், தற்போது இணைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 9-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் விரைவு ரயில், ஜனவரி 10-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில், திருச்சி- திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் போன்றவைகள் ஜனவரி 11-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஜனவரி 10-ம் தேதி மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில், ஜனவரி 11-ஆம் தேதி தூத்துக்குடி இருந்து மைசூர் செல்லும் விரைவு ரயில், விருதுநகர்-தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில், ஜனவரி 10, 11 திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் திருச்சி-திருச்செந்தூர் இடையே பகுதியாகவும், ஜனவரி 9,10 ஆகிய தேதிகளில் புனலூரில் இருந்து மதுரை செல்லும் விரைவு ரயில், ஜனவரி 10, 11 மதுரையில் இருந்து புனலூர் செல்லும் விரைவு ரயில் போன்றவைகள் திருநெல்வேலி-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர்-நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூர் பகல் நேர விரைவு ரயில்கள் ஈரோடு- கோவை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில், ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் போன்றவைகள் திருச்சி- நாகர்கோவில் இடையே பகுதி அவர் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து நெல்லை செல்லும் விரைவு ரயில், ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து ஈரோடு செல்லும் விரைவு ரயில் போன்றவைகள் திண்டுக்கல்- நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஜனவரி 8, 9, 11 ஆகிய தேதிகளில் பாலக்கோடு- திருச்செந்தூர்- பாலக்கோடு விரைவு ரயில்கள் விருதுநகர்- திருச்செந்தூர் இடையேயும், ஜனவரி 10-ல் மதுரை- திருச்செந்தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து ஜனவரி 10-ம் தேதி சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில், குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் போன்றவைகள் நெல்லை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
ஜனவரி 10-ல் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மேலும் ஜனவரி 12-ஆம் தேதி திருச்செந்தூர்- வாஞ்சி மணியாச்சி சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து 110 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். ஜனவரி 10-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில் போன்றவைகள் 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை காலதாமதமாக நெல்லை மற்றும் தூத்துக்குடியை சென்றடையும். ஜனவரி 10-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் 90 நிமிடங்கள் கால தாமதமாக திருச்சியை சென்றடையும்.