புதுச்சேரி மாநிலத்தில் மகளிருக்காக பிரத்தியேகமாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள கேபிஎம் பெட்ரோல் பங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். அதோடு தொடக்க விழாவை முன்னிட்டு 100 மகளிருக்கு முதல் கட்டமாக இலவசமாக பெட்ரோல் போடப்பட்டது.

ஆண்கள்-பெண்கள் ஒரே வரிசையில் நின்று பெட்ரோல் போடுவதால் வேலைக்கு செல்லும் பெண்கள் பல்வேறு விதமான சிரமங்களுக்கு ஆளாவதால் தனியாக பிங்க் பெட்ரோல் நிலையம், பெண்களுக்காக மட்டும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையம் வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அமைச்சர் சந்திர பிரியங்கா பெண்கள் மட்டும் செல்லும் வகையில் கூடிய விரைவில் பிங்க் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.