பாம்பு கடித்து மயக்க நிலைக்குச் சென்ற சிறுவனை போதை பொருள் உட்கொண்டு மயங்கியதாக கூறி மருத்துவம் பார்க்காமல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மேலப்பாதி கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஹரி டிசம்பர் 30ஆம் நாள் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து காயமடைந்துள்ளார். இதை அறியாத சிறுவன் தனது அம்மாவிடம் காலில் முள் குத்தியதாக கூறியுள்ளான்.

பின்னர் அந்த சிறுவன் மயக்க நிலைக்குச் சென்றதால் அவனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் சிறுவன் கஞ்சா, சிகரெட் அல்லது ஏதாவது ஒரு போதை பொருளை சுவாசித்ததால் மயக்கம் அடைந்துள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். போதை தெளிந்த உடன் சிறுவன் சரியாகி விடுவான் எனவும் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் கூறி நார்மல் வார்டுக்கு மாற்றியுள்ளனர்.

ஆனால் மறுநாள் வரை அந்த சிறுவன் கண் விழிக்காமல் கோமா நிலைக்குச் சென்றுள்ளான். கோமா நிலையில் இருந்த சிறுவனை அப்போது பணியில் இருந்த வேறொரு மருத்துவர் ஆய்வு செய்து பார்த்து சிறுவனை நச்சு பாம்பு தீண்டியதால் உடல் முழுவதும் நச்சுப் பரவி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை அடுத்து சிறுவனை திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து உயர் மருத்துவதுக்கமாக தஞ்சை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

ஆனால் அங்கும் அவனைக் காப்பாற்ற முடியாததால் மயக்க நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சிறுவனின் உயிரிழப்பிற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி மயிலாடுதுறை மருத்துவமனை முன்பாக நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து நேரில் விசாரணை செய்த மாவட்ட ஆட்சியர் லலிதா சிறுவனின் குடும்பத்திற்கு ஆட்சியரின் விருப்ப கருவூலத்தில் 2 லட்சம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். சிறுவனின் குடும்பத்தினர் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதாகவும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.