திருச்சி மாநகரத்தில் 32-வது காவல் ஆணையராக முதன் முறையாக பெண் ஐபிஎஸ் அதிகாரி சத்தியபிரியா நேற்று பொறுப்பேற்றார். திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையை பெற்ற சத்யபிரியா பொறுப்பேற்ற முதல் நாளே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவர் கூறியதாவது, திருச்சி மாநகரில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதேபோன்று ரவுடிசத்தை ஒடுக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதற்கு தன்னிடம் திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து மாநகரத் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் போன்றவர்களுடன் சத்யப்பிரியா ஐபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சத்யபிரியா ஐபிஎஸ் கூறியதாவது, உங்கள் பணியை அனைவரும் வெறுப்பின்றி செய்ய வேண்டும். உங்களுக்கு பணி சம்பந்தமாக எந்த பிரச்சனை இருந்தாலும் உடனே என்னை அணுகி புகார் தெரிவிக்கலாம். அதன்பிறகு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கும், ரவுடிகளின் அட்டகாசத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுங்கள்.
காவல் நிலையத்தில் வரக்கூடிய புகார் மனுக்களை முறையாக பெற்று விசாரித்தாலே பாதி பிரச்சனைகள் வராது என்றார். மேலும் மாநகரில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் தரம் உயர்த்தப்படுவதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முகாம்கள் அமைக்கப்படும். மருந்தகங்களில் விற்கப்படும் போதை மருந்துகளை முற்றிலும் ஒழிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதோடு குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.