ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள  குந்தி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோர்பா தொகுதிக்குள் உள்ள எர்மேர் கிராமத்தில் தோட்டக்கலை பணிக்காக குழிகள் தோண்ட வனத்துறையால் ஊர்ப்புற தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

வேலை முடிந்த பிறகு கூலி வழங்க வேண்டிய நேரத்தில், வனத்துறை காவலர் ராகுல் மஹதோ, தொழிலாளர்களுக்கு பணம் வழங்குவதற்காக கிராமத் தலைவரிடம் ஒரு கட்டு போலி ரூ.200 நோட்டுகளை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த நோட்டுகளில் “மனோரஞ்சன் வங்கி” (Full of Fun and Entertainment Bank) என்று எழுதப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உண்மையான பணத்திற்குப் பதிலாக குழந்தைகள் விளையாடும் போலி நோட்டுகள் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததும், கிராம மக்கள் ஆத்திரமடைந்து, வனத்துறை மீது கடும் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் கிராமத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து கிராம பிரதான் பெர்னார்ட் ஐந்த் தெரிவித்ததாவது, “வனத்துறை காவலர் ராகுல், இரண்டு பலாப்பழங்களைப் பெற்று விட்டு, தொழிலாளர்களுக்குப் பணம் கொடுக்கும்படி எனக்கு ஒரு கட்டு ரூ.200 நோட்டுகளை கொடுத்தார். ஆனால் அதைத் திறந்தபோது, அனைத்தும் போலி ‘மனோரஞ்சன் வங்கி’ நோட்டுகள் என்பது தெரியவந்தது,” என்று கூறினார்.

இந்நிலையில், வனத்துறை இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடைபெறும் என்று உறுதியளித்துள்ளது. இது ஒரு தனிப்பட்ட மோசடியா, அல்லது இதற்குப் பின்னால் எந்த அமைப்பும் செயற்படுகிறதா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

போலி நோட்டுகள் எந்தவழியாக வந்தன, எங்கு தயாரிக்கப்பட்டன என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர், சம்பந்தப்பட்ட வனத்துறை காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.