அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் (18) ஒருவர் கிழக்கு பாரிஸில் உள்ள போர்ட் டி மான்ட்ருயிலில் அமைந்துள்ள ibis ஸ்டைல்ஸ் என்ற ஓட்டலில் தங்கியுள்ளார். ஹோட்டலில் இரண்டாவது மாடியில் தங்கி இருந்த அந்தப் பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அவர் அந்த குழந்தையை ஒரு துணியில் சுற்றி தொப்புள் கொடியுடன் ஜன்னலுக்கு வெளியே வீசி உள்ளார்.
ஹோட்டலின் முன் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை கிடந்ததை பார்த்த அங்குள்ளவர்கள் அதிர்ச்சியில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் படுகாயம் அடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையை பிரசவித்த பெண்ணும் மோசமான நிலையில் இருந்துள்ளார்.
பின்னர் காவல் துறையினர் அந்த இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து காவல்துறையினரின் விசாரணையில் அந்த இளம் பெண் ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்ட மாணவர் குழுவில் இடம்பெற்றுள்ளவர் என தெரிய வந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
