தேனி மாவட்டத்தின் அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது. தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆண்டிபட்டி க.விலக்கு சாலையில் பிரம்மாண்ட பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில், ஆச்சரியப்படும் விதமாக போடி தொகுதி தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரசாரப் பணிகளை முன்னின்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னை எங்கிருந்தாலும் வாழ்க என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது உலக அதிசயங்களில் ஒன்றாகத் தெரிகிறது” என நக்கலாகக் குறிப்பிட்டு அதிமுக தரப்பை அதிரவைத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், “தேனி மாவட்டம் அ.தி.மு.க-வின் கோட்டை என்பது ஒரு பழைய வரலாறு; அந்தக் கோட்டையில் ஓட்டை விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது” எனக்கூறி எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி சவால் விடுத்துள்ளார். தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தி.மு.க பிரம்மாண்ட வெற்றி பெறும் என்றும், தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் அ.தி.மு.க-வின் முகமாக இருந்த ஓ.பி.எஸ், இன்று தி.மு.க வேட்பாளராக நின்று முதலமைச்சரின் பிரசாரத்திற்காகத் தயாராகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.