தனது முன்னாள் காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ததை ஏற்க முடியாத ஒரு பெண், அந்த மனைவியைப் பழிவாங்க HIV வைரஸை ஆயுதமாகப் பயன்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கர்னூலைச் சேர்ந்த வசுந்தரா (34) என்பவருக்கும் ஒருவருக்கும் காதல் இருந்துள்ளது. ஆனால், அந்த நபர் வசுந்தராவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
அந்தப் பெண் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் மருத்துவர் ஆவார். இதனால் ஆத்திரமடைந்த வசுந்தரா, அந்தத் தம்பதியைப் பிரிக்க ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினார்.
தனது தோழியான நர்ஸ் ஒருவரின் உதவியுடன், அரசு மருத்துவமனையில் இருந்து ‘ஆராய்ச்சி’ என்ற பெயரில் HIV பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை வசுந்தரா வாங்கியுள்ளார்.
கடந்த ஜனவரி 9-ம் தேதி, அந்த பெண் மருத்துவர் ஸ்கூட்டரில் சென்றபோது, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்திய வசுந்தரா, அவருக்கு உதவுவது போல நடித்துத் தனது கையில் வைத்திருந்த HIV ரத்தத்தை ஊசி மூலம் மருத்துவரின் உடலில் செலுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், வசுந்தரா மற்றும் அவருக்கு உதவிய நர்ஸ் உட்பட 4 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
