மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக அரசு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விஜய்யின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் தகுதி குறித்துக் கேள்வி எழுப்பிய அவர் மனைவியுடனேயே சரியான கூட்டணி இல்லாதவர் மக்களுக்கு எப்படித் தலைமை தாங்குவார் என்று வினவினார்.
இந்து குடும்பத்தைச் சேர்ந்த தனது மனைவியை மதம் மாற்றிய விஜய் தற்போது மதச்சார்பின்மை குறித்துப் பேசுவது முரண்பாடானது என்றும் தனது திரைப்பட நுழைவுச் சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க முடியாதவர் ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்று கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் சாடினார்.
தலைமைக்குத் தகுதியற்ற விஜய் தனது கட்சியை இப்போதே மூடிவிட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து திமுக அரசை விமர்சித்த அர்ஜுன் சம்பத் அந்த ஆட்சி ஊழல் நிறைந்த ஒரு இயந்திரமாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். திமுகவில் தலைவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால்தான் அதிமுகவிலிருந்து வருபவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பதவிக்காகத் திமுகவுடன் இணைந்திருப்பது எம்ஜிஆரின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் கமல்ஹாசன் தனது சுயநலத்திற்காகத் திமுகவின் காவலாளியாக மாறிவிட்டதாகவும் அவர் பகடி செய்தார். மேலும் இந்துக்களின் உரிமைகளை மீட்கும் வகையில் வரும் மார்ச் பதினைந்து அன்று சென்னையில் மாநாடு நடத்த உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
