தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், அணியின் தேர்வு குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இப்போட்டியிலும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளித்துவிட்டு, சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார். துணைக் கேப்டனாக இருக்கும் கில்லுக்காக அணித் தேர்வில் ‘இரட்டை நிலைப்பாடு’ இருக்கக் கூடாது என்றும், அணி நலனுக்காகத் துணைக் கேப்டனை நீக்குவது தவறல்ல என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

இருபது ஓவர் உலகக் கோப்பை 2026 போட்டிக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள கில், இந்தத் தொடரில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள முகமது கைஃப், “சுப்மன் கில் அவுட் ஆகும் விதத்தைப் பாருங்கள். ஸ்லிப்பில் பிடிபடுகிறார். அதிரடியாக ஆட வேண்டும் என அபிஷேக் ஷர்மாவைப் போல ஆட முயல்கிறார், ஆனால் பலன் இல்லை.

இப்போது அவருக்கு ஒரு இடைவெளி கொடுத்துவிட்டு, சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படும் சஞ்சு சாம்சன் குறித்துப் பேசிய முகமது கைஃப், அவர் ஒரு தரமான வீரர் என்றும், அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். “2024 ஆம் ஆண்டில் ஒரு தொடக்க ஆட்டக்காரராக சாம்சன் ஐந்து இருபது ஓவர் இன்னிங்ஸ்களில் மூன்று சதங்கள் அடித்துள்ளார்.

இருபது ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் வேறு யாரும் செய்யாத சாதனை இது. ஆனால், அவருக்கு மட்டும் மிகக் குறைந்த வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன, மற்றவர்களுக்கோ தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது வெளிப்படையாகத் தெரிகிறது, ஆனால் இப்போது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், கில்லின் சமீபத்திய மோசமான ஆட்டத்திற்குக் காரணம், அவர் ஒரே நேரத்தில் அதிகப்படியான பொறுப்புகளைச் சுமப்பதுதான் என்றும் கைஃப் குறிப்பிட்டுள்ளார்.

“டெஸ்ட் கேப்டன்சி, ஒருநாள் கேப்டன்சி, இருபது ஓவர் துணைக் கேப்டன்சி என இவ்வளவு அழுத்தத்தை எந்த வீரராலும் ஒரே நேரத்தில் தாங்க முடியாது. இது வேலைப்பளுவின் சுமைதான்; தொடர்ந்து ஒரு வீரரால் உச்ச நிலையில் இருக்க முடியாது” என்றும் அவர் சுப்மன் கில்லுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.