காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் அது என்ன எல்லா திருடர்களும் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு பிரதமர் மோடியை குறித்து தான் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்து தண்டனையை நிறுத்தி வைத்துள்ள நிலையில் தீர்ப்பு வந்த 24 மணி நேரத்திற்குள் நாடாளுமன்ற மக்களவை செயலகம் அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திமுக கட்சியின் எம்பி திருச்சி சிவா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் என்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகிறது.

ராகுல் காந்தியை அவசரமாக தகுதி நீக்கம் செய்வதற்கு என்ன காரணம். எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கிறது. இவ்வளவு அவசரம் தேவையில்லை. பொதுவாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தான் அமளியில் ஈடுபடும். ஆனால் உண்மை அது கிடையாது. இந்த முறை இத்தனை நாட்கள் நாடாளுமன்ற அவை முடங்கியதற்கு காரணம் ஆளும் கட்சி தான். ஆளும் கட்சி தொடர்ந்து அமலியில் ஈடுபட்டு நாடாளுமன்ற அவை நடந்து கொள்ளாத அளவுக்கு பார்த்துக் கொள்கிறார்கள். மேலும் பாஜக அரசு மற்றத்துறைகள் வாயிலாக எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.