கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு வடக்கு தெருவில் ஜாஸ்மின் சுதா(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயராணி(20), ஜெயலட்சுமி(22) ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். அவ்வபோது இருவரும் ஜாஸ்மின் சுதாவின் வீட்டிற்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல ஜெயலட்சுமியும், ஜெயராணியும் சுதாவின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர். பின்னர் சுதா வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த 2 தோழிகளை காணவில்லை. மேலும் பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை காணாமல் போனதை கண்டு சுதா அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக தனது தோழிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. பின்னர் குருந்தன்கோட்டில் இருக்கும் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கும் அவர்கள் இல்லை. இதுகுறித்து ஜாஸ்மின் சுதா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயலட்சுமியை கைது செய்தனர் தலைமறைவாக இருக்கும் ஜெயராணியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.