
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் பகுதியில் உள்ள பானி பூரி கடையில் ஒருவர் பானி பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த இருவர் அவரை மயக்க மருந்து வைத்து கடத்துவதைப் போல் நடித்தனர். பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்தவரும் மயங்கி விழுவது போல் நடித்தார். உடனே அந்த இருவரும் அவரை பைக்கில் நடுவில் ஏற்றி பைக் ஸ்டார்ட் செய்தனர். ஆனால் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. இந்த சம்பவத்தை சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பைக் ஸ்டார்ட் ஆகாதது அறிந்து அருகில் உள்ளவர்கள் இங்கு என்ன நடக்கிறது என அந்த இருவரிடம் கேள்வி கேட்டனர். இந்த நிகழ்வு அனைத்தையும் ஒருவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ அதிகமானவரால் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டுள்ளது. அதாவது ஒரு நபரை கடத்துவது போல நடித்து படம் எடுத்து படத்தின் பின்னணி பாடலை வைத்து வீடியோ எடுத்து அந்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுவெளியில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதாக நினைத்து எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகிய நிலையில், பொதுமக்களை இடையூறு செய்யும் விதமாக பொதுவெளியில் ஒரு நபரை கடத்துவது போன்ற அச்சத்திற்குரிய செயல்களை செய்வதாக இந்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு ஆர்வக்கோளாறுத்தனமாக எல்லை மீறிய வீடியோக்களை எடுப்பது குறித்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.