திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜங்ஷனில் பாலபாக்யா நகரில் வசித்து வந்தவர் ஜெயராமன்(63). இவர் அரசு நெடுஞ்சாலைத்துறையில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு விக்னேஷ் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் ராஜா கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ரெட்டியார்பட்டி பகுதியில் விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளார். மகன் இறந்ததிலிருந்து ஜெயராமன் அவரது மனைவியும் மனக்கவலையிலேயே இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ நாளன்று ஜெயராமன் மகன் விபத்துக்குள்ளாகிய ரெட்டியார்பட்டி பகுதிக்கு சென்று உள்ளார். கையில் விஷம் கலந்த மதுவையும் எடுத்து சென்றுள்ளார். மகன் இறந்த இடத்திலேயே விஷத்தை அருந்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த பெருமாள் புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன் இறந்த இடத்திலேயே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.