திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 28 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார். இதனை அந்த சாலையில் சென்ற சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ மிகவும் வைரலான நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையதள வாசிகள் பலரும் கூறினர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞர் யார் என்று விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளனர். அதன் பின் அந்த வாலிபரின் தரப்பிலிருந்து ஒரு வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் “என் பெயர் பாலகிருஷ்ணன். கடந்த பிப். 27ஆம் தேதி நான் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது கைகளை விட்டு பைக்கை ஒட்டியது இணையதளத்தில் பெரிய செய்தியாக பரவி விட்டது.

இதனால் காவல் துறையினர் என்னை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே இனிமேல் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுவேன், இது போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என்றும், இந்த தவறை யாரும் செய்ய வேண்டாம், இருசக்கரவாகனத்தை ஓட்டுவதற்கு முன் ஹெல்மெட்டை அணிய வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் காவல்துறையினர் வெளியிட்ட இளைஞரின் வீடியோ இணையதளங்களில் அதிகளவு பரவி வருகிறது.