சென்னையில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து நடைபெற்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. பணி நிரந்தரம் வேண்டும், தனியார் மயமாக்கலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பணியில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தமிழக அரசு தொழிலாளர்களின் நலனுக்காக ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம் காப்பீட்டு நிவாரணம், பிள்ளைகளுக்குக் கல்வி உதவித்தொகை, சிகிச்சை நிதி, வீடு கட்டும் உதவி, தொழில் தொடங்க சலுகை கடன் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்குழுவின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். போராட்டம் முடிவடைந்த நிலையில், அரசு வழங்கிய உத்தரவுகள் நடைமுறைக்கு வரும் வரை தொடர்ந்து கண்காணிப்பதாக தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. சென்னையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களும் இந்த அறிவிப்புகளை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
