உத்திரபிரதேசம் மாவட்டத்தில் உள்ள கௌதம புத்த நகர் பகுதியில் லலித் (17) என்ற சிறுவன் தனது நண்பன் முனேஷ் என்பவருடன்  மோட்டார் சைக்கிளில்  சென்றுள்ளார். இருவரும் பத்தாம் வகுப்பு பள்ளி தேர்வுக்கான அட்மிட் கார்டை பெற சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் செல்லும் சாலையில் டிராக்டர் ஓட்டுநர் ஒருவர் டிராக்டரை ஒட்டியவாரே ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கட்டுப்பாட்டை மீறி லலித் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதி உள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே லலித் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். மேலும் அவரது நண்பரான முனேஷ் படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து லலிதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படுகாயம் அடைந்த முனேஷ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து லலிதின் தந்தை சுந்தர் பால் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகிய ஓட்டுநரை கைது செய்ய தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.