அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜான் போல்டன், இங்கிலாந்து ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அளித்த கருத்துகள் தற்போது சர்வதேச அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளன. அவர் கூறுகையில், “டிரம்புக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே ஒரே நேரத்தில் மிக நெருக்கமான தனிப்பட்ட உறவு இருந்தது. ஆனால் அது இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. இப்படி நேரும் போது, அது உலகத் தலைவர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
டிரம்பை நம்பி ஏமாற்றம் அடையக் கூடும் என எச்சரித்த போல்டன், “தனிப்பட்ட நட்பு என்பது அரசியல் உறவுகளுக்கு பதில் ஆகாது. அரசாங்க உறவுகளும், இராஜாங்க உறவுகளும் வெவ்வேறு. டிரம்ப் எப்போதும் சர்வதேச உறவுகளை, தனிப்பட்ட நெருக்கத்தின் அடிப்படையில் தான் பார்க்கிறார். அவருக்கு புதினுடன் நெருக்கம் இருந்தால், அதுவே அமெரிக்கா–ரஷியா உறவாகவும் நினைத்துவிடுகிறார். அதேபோல, மோடியுடன் இருந்த உறவும் இப்போது சிதைந்துள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
முன்னதாக ‘ஹவுடி மோடி’ முதல் பல்வேறு சர்வதேச நிகழ்வுகளுக்கு வரை டிரம்ப்–மோடி உறவு உலகளவில் முக்கியமானதாக பேசப்பட்டது. ஆனால் தற்போது, இந்தியா–அமெரிக்கா இடையே நீடித்து வரும் வர்த்தக மோதல், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்ற சூழ்நிலைகளில், ஜான் போல்டன் வெளியிட்ட இந்த கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எதிர்காலத்தில் இந்த நிலைமை இரு நாட்டு உறவுகளை எவ்வாறு பாதிக்கும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
