ஹைதராபாத் சாரூர் நகரத்தில் வழக்கறிஞர் நிங்ஷ் உஷப்பா வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 15 2023 அன்று சூர்யாப்பேட்டை டிப்போவால் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்தில் எல்.பி நகரில் இருந்து சூர்யா பேட்டைக்கு பயணம் செய்தார். அந்த பேருந்தில் ரூ.180 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்து திரும்பிய அவர் கம்மம் டிப்போவால் இயக்கப்பட்ட பேருந்தில் பயணித்தபோது ரூ.190 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இந்த கட்டண வித்தியாசத்தை பற்றி உஷப்பா ஓட்டுனரிடம் கேட்ட போது அவர் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே இது குறித்து நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் TGSRTC அதிகாரிகள் டிக்கெட் பிழை காரணமாக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தனர். இதற்கு உஷப்பா எல்.பி நகருக்கு பதிலாக தொலைவிலுள்ள எம்.ஜி.பி.எஸ் க்கு பயணிப்பது போல் டிக்கெட் வழங்கப்பட்டது என்று டிக்கெட்டை ஆதாரமாக காண்பித்தார்.

இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் TGSRTC சேவையில் குறைபாடு உள்ளது என்று கூறி இழப்பீடாக ரூ. 10010 ஐ 45 நாட்களுக்குள் செலுத்துமாறு உத்தரவிட்டது. மேலும் இந்த சம்பவம் பயணிகளின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.