
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்துள்ள பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இளையமகள் முத்தரசி(23). இவருக்கு செல்போன் மூலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமணன்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் லட்சுமணன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக லட்சுமணனின் குலதெய்வ கோயிலில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் முத்தரசியின் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் லட்சுமணனுக்கு குவைத் நாட்டிலிருந்து வேலைக்கு அழைப்பு வந்துள்ளது. இதனால் லட்சுமணன் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். மேலும் இதற்காக பாஸ்போர்ட், விசா எடுத்த அவர் குவைத் நாட்டில் வேலை செய்யப் போகும் கம்பெனியின் கிளை அலுவலகம் உள்ள மும்பைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கணவனை பிரிந்து இருந்த முத்தரசி, அவரை அவ்வபோது தொடர்புக் கொண்டு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வந்துள்ளார். இதையடுத்து அவரை பெற்றோர் சமாதானம் செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தனது தந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு மாடி பகுதியில் உள்ள கீற்று கொட்டகைக்கு சென்ற முத்தரசி நீண்ட நேரம் ஆகியும் கீழே வரவில்லை. இதைத்தொடர்ந்து பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது முத்தரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மும்பையில் உள்ள அவரது கணவர் லட்சுமணன் தகவல் அறிந்து ஊர் திரும்பி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.