தெலுங்கானாவில் மருத்துவமனையை திருமண மண்டபமாக மாற்றி நோயாளி படுக்கையை மணமேடையாக மாற்றி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு மணமகன் தாலி கட்டியுள்ளார். தெலுங்கானா மாநிலம் மஞ்செரியாலா மாவட்டத்தை சேர்ந்த சைலஜாவுக்கும் திருப்பதிக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. அவர்களின் திருமணம் நேற்று முன்தினம் மணமகள் வீட்டில் நடைபெறுவதாக இருந்த நிலையில் திடீரென மணமகள் சைலஜாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மஞ்செரியாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சைலஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அறுவை சிகிச்சை செய்தனர். இருப்பினும் நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணத்தை நடத்தி முடிக்க முடிவு செய்த இருவீட்டாரும் தங்களின் பொருளாதார நிலை, திருமண ஏற்பாடுகள் பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். நீண்ட ஆலோசனைக்கு பின் மருத்துவமனை நிர்வாகம் எளிமையான முறையில் மருத்துவமனையை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் மருத்துவமனையை திருமண மண்டபம் என்றும் மணமகள் படுத்து இருந்த படுக்கையை மணமேடை என்று கருதி உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கைதட்ட சைலஜா கழுத்தில் திருப்பதி தாலி கட்டினார்.