
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் ரத்தினம். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிவராத்திரி என்பதால் நாமக்கல்லில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மோகனூர் சாலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதற்காக சாலையின் ஓரம் நின்று லிப்ட் கேட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர்.
பைக்கில் ஏறிய சித்த மருத்துவரை மோகனூருக்கு அழைத்து செல்வதற்கு பதிலாக அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் போன் செய்து மேலும் சில நபர்களை அங்கு வரவழைத்ததுள்ளனர். அந்த நேரத்தில் சித்த மருத்துவர் ரத்தினம் செய்வதறியாமல் திணறிய நிலையில் அந்த மர்ம நபர்கள் மருத்துவர் அணிந்திருந்த 2.5 சவரன் தங்க நகையை மிரட்டி பறித்து கொண்டனர். அதோடு விடாமல் மேலும் அவரது வங்கி கணக்கில் இருந்த 1 லட்சம் ரூபாயை செல்போனில் உள்ள gpay மூலம் தங்கள் கணக்கிற்கு மாற்றிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவர் போலீசில் புகார்கொடுத்தார். இதனையடுத்து நாமக்கல் காவல்துறையினருக்கு இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
தற்போது இந்த வழக்கில் சஞ்சய்(22),அருண்(21),அருண்குமார்(24),சஞ்சய்(22),கார்த்திகேயன்(22),புருஷோத்தமன்(24) ,கார்த்திகேயன்(21) ஆகிய 7 பேர் தான் சித்த மருத்துவரிடம் நகை பணத்தை பறித்தனர் என்று தெரிய வந்த நிலையில் அவர்களை கைது செய்தனர். அதன் பின் மாவட்ட ஆட்சியர் உமா இவர்கள் 7 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி கைது செய்யப்பட்ட 7 பேரும் குண்டர் தடுப்பு காவலில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.