ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், 11 வயது சிறுமி மீது ஒருமாதத்திற்கும் மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர்களில் சிறுமியின் மைத்துனரும், ஒரு சிறுவரும்உள்ளனர் என்பது தெரியவந்தது. போலீசார் தெரிவித்ததாவது, கடந்த  ஜூன் 14 முதல் ஜூலை 27 வரை குற்றவாளிகள் சிறுமியை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சிறுமியின் தாய் ஆகஸ்ட் 3ஆம் தேதி குந்தா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனை ரூர்கேலா குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பியுள்ளனர். மற்ற இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். உயிர் பிழைத்த சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், சிறுமியின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.

குந்தா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பஞ்சனன் மொஹந்தி கூறுகையில், குற்றவாளிகள் வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு இடங்களில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் POCSO சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.