உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் ட்ரோனிகா சிட்டி பகுதியில், ஆகஸ்ட் 4ஆம் தேதி கடத்தப்பட்ட 1 வயது குழந்தையை போலீசார் வெறும் 4 மணி நேரத்திலேயே மீட்டனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், குழந்தைகளின் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி ஏலம் போட்டு விற்பனை செய்த கும்பல் ஒன்று செயல்பட்டு வந்தது வெளிச்சம் கண்டது. திருமணமாகாத பெண்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடம், “நாங்கள் பெற்ற குழந்தை இறந்துவிட்டது ” என்று பொய்கூறி  குழந்தைகளை பறித்தும், தேவை அதிகமான நேரங்களில் நேரடியாக கடத்தியும் வந்துள்ளனர்.

இந்த வழக்கில் நவீத், அப்சர், ஷைஸ்தா, சந்தியா ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்சர் இறைச்சிக்கடை நடத்துபவர்; சாவன் மாதத்தில் கடை மூடப்பட்டதால் அது கும்பலின் தங்கும் இடமாக பயன்படுத்தப்பட்டது. நவீத் அவரது நண்பர். ஷைஸ்தா (முன் பெயர் சுவாதி – வாசிம் திருமணத்திற்குப் பிறகு மதமாற்றம்) ஷாம்லியில் “பாரி” என்ற பெயரில் திருமண அலுவலகம் நடத்தி வந்தார்.

சந்தியா முசாஃபர்நகரில் “சுபார்த்தி” என்ற பெயரில் திருமண அலுவலகம் நடத்தி வந்தார். கும்பலின் மூளை ரஞ்சனா – மொராதாபாத் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த இவர் – தற்போது தலைமறைவில் உள்ளார்.

போலீசாரின் தகவலின்படி, குழந்தைகளை குறியீட்டு வார்த்தைகளால் அடையாளப்படுத்தி, பாலினம் மற்றும் நிறத்தை கூறி விலை நிர்ணயம் செய்துள்ளனர். அழகான ஆண் குழந்தைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இவ்வாறு குழந்தையற்ற தம்பதிகளுக்கு விற்பனை செய்த இவர்களின் வலையமைப்பு உத்தரப்பிரதேசத்துடன் உத்தரகண்டிலும் பரவியிருந்தது. தலைமறைவில் உள்ள ரஞ்சனா கைது செய்யப்பட்டால் மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.