பரபரப்பான சாலையில் ஏழு கார்களுக்கும் மேலாக ஏறி இறங்கிய பின்னரும், தனது ஐபோன் 17 எவ்விதப் பாதிப்பும் இன்றிச் செயல்படுவதாகப் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் டிஎஸ்பி ஆன் திராட்டில் என்ற பெயரில் இயங்கும் நபர், தனது மோட்டார் சைக்கிளில் அலைபேசியைப் பொருத்திப் பயணம் செய்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
View this post on Instagram
வாகனத்தின் கைப்பிடியில் வைக்கப்பட்டிருந்த அலைபேசி எதிர்பாராதவிதமாக நழுவிச் சாலையில் விழுந்த நிலையில், அதை எடுப்பதற்குள் அந்த வழியாக வந்த ஏழு கார்கள் அதன் மீது ஏறிச் சென்றுள்ளன. போக்குவரத்து குறைந்தவுடன் அந்தப் பயத்துடன் அலைபேசியை மீட்டவருக்கு ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.
ஏழு கார்கள் ஏறிச் சென்ற பிறகும் அந்த அலைபேசி எந்தச் சிக்கலும் இன்றிச் செயல்பட்டதைக் கண்டு அந்தப் பயணி மட்டுமின்றி இணையவாசிகளும் வியந்து போயுள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், அலைபேசியின் கேமரா லென்ஸ் பகுதியில் மட்டுமே சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், திரையோ அல்லது மற்ற பாகங்களோ எவ்விதப் பாதிப்பும் அடையவில்லை என்றும் காட்டியுள்ளார்.
அப்பிள் நிறுவனத்தின் தரம் மற்றும் வலிமையை நிரூபிக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாகச் செய்யப்படும் சோதனைகளை விட இதுவே உண்மையான தரப் பரிசோதனை என்று பயனர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டு வருகின்றனர்.
