பின்லாந்து நாட்டின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ‘சூப்பர்ஷீ’ தீவு, ஆண்களுக்கு அனுமதி இல்லாத ஒரு பிரத்யேகப் பெண்ணுலகமாகத் திகழ்ந்து உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. பால்டிக் கடலில் 8.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தீவு, சமூக அழுத்தம் மற்றும் ஆண்களின் கவனச்சிதறல்கள் எதுவுமின்றி பெண்கள் தங்களை ரீசார்ஜ் செய்து கொள்வதற்காக அமெரிக்கத் தொழிலதிபர் கிறிஸ்டின் ரோத் என்பவரால் உருவாக்கப்பட்டது.

மேலும் இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், கடற்கரை ஓரங்கள் மற்றும் சொகுசு வில்லாக்கள் கொண்ட இந்தத் தீவில் ஒரே நேரத்தில் எட்டு பெண்களுக்கு மட்டுமே தங்கும் அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தத் தீவு வேறொரு உரிமையாளருக்கு கைமாறிய போதிலும், அதன் அடிப்படை நோக்கம் மாறாமல் இப்போதும் ‘பெண்களுக்கான சொர்க்கமாகவே’ பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் இங்கு யோகா, தியானம் மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளுடன் தங்கள் நேரத்தைச் சுதந்திரமாகச் செலவிடலாம். பராமரிப்புப் பணிகளுக்காக அவ்வப்போது ஆண்கள் அனுமதிக்கப்பட்டாலும், பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பெண் நிபுணர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேக்கப் அல்லது சமூக எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி பெண்கள் இயல்பாகத் தங்களை உணர்ந்து கொள்ள இத்தீவு ஒரு சிறந்த புகலிடமாக உள்ளது.