
சென்னையில் தியாகராய நகர் பகுதியில் டாக்டர் நாயர் தெருவில் வசித்து வருபவர் முருகப்பன் (60). இவருக்கு ஆண்டாள் (56) என்ற மனைவி இருந்துள்ளார். முருகப்பன் கப்பல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முருகப்பனின் மனைவி ஆண்டாள் நவம்பர் மாதம் 4ஆம் தேதி மாலையில் விளக்கு ஏற்றுவதற்காக அகல் விளக்குகளில் தீபத்தை ஏற்றி வைத்துள்ளார். அப்போது அருகில் இருந்த அகல் விளக்கு நெருப்பு ஆண்டாளின் புடவையில் பற்றிக் கொண்டது. இதனை ஆண்டாள் கவனிக்காமல் தீ மளளவென அவர் உடல் முழுவதும் பரவியது.
தீ முழுவதும் பிடித்ததால் செய்வதறியாது ஆண்டாள் கதறி உள்ளார்.இதனால் பலத்த காயம் அடைந்த ஆண்டாளை அக்கம் பக்கத்தினர் மீட்டுஅருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆண்டாள் திடீரென நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.இது குறித்து அறிந்த காவல்துறையினர் சென்று ஆண்டாளின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.