தயாரிப்பாளரும் நடிகருமான சுரேஷ் மற்றும் நடிகை மேனகா ஆகியோரின் இளைய மகளான கீர்த்தி சுரேஷ், மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013-ஆம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார். ‘ரஜினிமுருகன்’, ‘ரெமோ’, ‘பைரவா’, ‘மாமன்னன்’, ‘சைரன்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by UNICEF India (@unicefindia)

நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ‘ரகு தாத்தா’ படத்தில் இவரது கதாபாத்திரமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், யுனிசெப் (UNICEF) அமைப்பின் குழந்தைகள் நலனுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அதில், “இந்தியாவில் குழந்தைகளுக்கான யுனிசெப் தூதராக இணைவதில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக வளரவும், கற்றுக்கொள்ளவும், கனவு காணவும் தகுதியானது. யுனிசெப் கடந்த 76 ஆண்டுகளாக அதை நனவாக்க உழைத்து வருகிறது. அந்தப் பணியில் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், வருண் தவானுடன் ‘பேபி ஜான்’, விஜய் தேவரகொண்டாவுடன் ‘தோட்டம்’ மற்றும் மிஷ்கினுடன் ஒரு படம் எனப் பல படங்களில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.