கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் 2 பேர்  உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்ததள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே துறையின் முதற்கட்ட விசாரணையில் வெளியாகிய தகவலின்படி, விபத்து நடந்த இடமான கேட் எண் 170 என்பது இன்டர்லாக் செய்யப்படாத கேட் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரயில் வருகிறதா, சிக்னல் சென்றதா என்ற தகவலுக்கு தானியங்கி அமைப்புகள் இல்லை. அந்த இடத்தில் கேட் கீப்பர் மேனுவல் முறையில் கையை வைத்தே கேட்டை மூட வேண்டும்.

இன்று காலை சிக்னல் கிடைத்ததும் கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கியிருந்தார். அந்த நேரத்தில், பள்ளி வேன் ஓட்டுனர் வேகமாக தண்டவாளத்தில் நுழைந்து, விபத்தை ஏற்படுத்தியதாகவும், கேட் கீப்பர் தன்னுடைய கடமையைச் செய்தபோது நடந்த விபத்தாகவும் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

அதாவது கேட் கீப்பர் தண்டவாளத்தை மூடுவதற்காக சென்றபோது பள்ளி வேன் ஓட்டுநர் தான் அவரை கட்டாயப்படுத்தி ரயில் வருவதற்குள் சென்று விடுகிறேன் என்று கடந்து சென்றுள்ளார். இதனால்தான் விபத்து நடந்ததாக ரயில்வே விளக்கம் கொடுத்துள்ள நிலையில் அந்த பகுதி மக்கள் கேட் கீப்பரின் அலட்சியம் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக மண்டல ரயில்வே மேலாளர் (DRM) மற்றும் உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கேட் கீப்பருக்கு சிக்னல் வந்த நேரம் மற்றும் அவர் கேட்டை மூட தொடங்கிய நேரம் ஆகியவை குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், வேன் ஓட்டுனரின் செயல்பாடுகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் மனிதத் தவறு யாருடையது என்பது குறித்து விரைவில் முழுமையான அறிக்கையை ரயில்வே துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தில் ஆய்வு செய்துள்ள நிலையில் உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து தற்போது கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ரயில்வே கேட் மூடாமல் அலட்சியமாக இருந்ததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர் மீது சுமார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் செம்மங்குளம் ரயில்கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாட்டில் நியமித்தது சர்ச்சையான நிலையில், தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்தராஜ் கூறியுள்ளார்.