
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதராக அரசு ஜே.பி.சிங், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறைவடைந்தது இல்லை, அது தற்போதைக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் தன்னுடைய எல்லைக்குள் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு சரணடைய செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் கூறினார்.
இஸ்ரேலிய i24 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அவர் மே 10-ம் தேதி இந்தியா நடத்திய தாக்குதல் பாகிஸ்தானுக்கு முக்கிய எச்சரிக்கையாக அமைந்ததாகவும் தெரிவித்தார். “போர் நிறுத்தம் தொடர்கிறது. ஆனால், சிந்தூர் நடவடிக்கை முடிவடைந்தது இல்லை. இந்தியா பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் உள்கட்டமைப்புகளுக்கு எதிராக இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது” என தூதர் சிங் தெரிவித்தார்.
மேலும், 26/11 மும்பை தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த ஹபீஸ் சயீத், சாஜித் மிர், லக்வி போன்ற பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், “நல்லெண்ணம் மற்றும் நட்பு” என்ற அடிப்படையில் அமைந்த IWT (சிந்து நதி நீர் ஒப்பந்தம்) நியாயமாக செயல்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
அத்துடன், அமெரிக்கா சமீபத்தில் தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவுக்கு ஒப்படைத்தது போல, பாகிஸ்தானும் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது குழுவினரை ஒப்படைக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். “அவர்கள் எளிதாக ஒப்படைக்க முடியாத அளவுக்கு முக்கியமானவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் இதுவரை சுதந்திரமாக பாகிஸ்தானில் சுற்றித் திரிகின்றனர் என்பது தான் நிஜம்” என்று அவர் கூறினார்.
இதே பேட்டியில், பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்க வேண்டும் எனவும், இந்தியாவின் புதிய இயல்பு நிலை என்பது தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் செய்வதே என்றும் அவர் தெரிவித்தார். “இனி, இரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாயாது” என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு எனவும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.