சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் ஒருவரின் மகள்(21) மகளிர் கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவரது தாயார் கடந்த 2022 ஆம் ஆண்டு இறந்துள்ளார். மேலும் அந்த இளம் பெண் சிறிது மன வளர்ச்சி குறைபாடு உடையவர்.இந்த இளம் பெண் தினமும் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் இந்த இளம் பெண்ணின் செல்போனுக்கு தவறான குறுஞ்செய்திகளும், புகைப்படங்களும் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரது தந்தை அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் மகளுக்கு தேர்வு இருப்பதால் விசாரணை நடத்த வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த இளம் பெண்ணுக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டதை அடுத்து சந்தேக மடைந்த தந்தை அந்த பெண்ணிடம் விசாரணை செய்துள்ளார். இதில் அந்த இளம் பெண் தனது தோழி ஒருவர் மூலம் தெரிந்த சில நபர்கள் தன்னை தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்தார். இது குறித்து கல்லூரிக்கு அருகில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில் இந்த இளம் பெண்ணின் தோழி மற்றும் அவரிடம் தவறாக நடந்து கொண்ட எட்டு பேரையும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுபோன்ற 2018 ஆம் ஆண்டு சென்னை அயனாவரம் பகுதியில் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தைப் போன்று மீண்டும் நடந்திருப்பதால் அப்பகுதியில் மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.